தூத்துக்குடியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "நான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, டார்வின் என்பவர் என்னை ஒருதலையாகக் காதலித்தார். பின்னர் நான் கோவை தனியார் கல்லூரியில் பி.டெக் படித்தேன்.
டார்வினுக்கும், எனக்கும் 2017, ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் தேவாலயத்தில் வைத்து திருமணம் நடந்ததாக, கீழூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் சான்றிதழ் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.
இது குறித்து, நான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெற்றபோது, போலி ஆவணங்கள் மூலம திருமணம் நடந்ததாக சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஆலயத்தின் பங்குத் தந்தையிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த நாளில், அந்த ஆலயத்தில் தருமணம் எதுவும் நடக்கவில்லை என்றும், அந்த சான்றிதழை தான் வழங்கவில்லை என்றும் தெரிவித்தார்.
திருமணம் நடந்ததாக கூறப்படும் நாளில் நான் தூத்துக்குடியில் இல்லை.
கல்லூரியில் செய்முறை தேர்வில் பங்கேற்றிருந்தேன். அதற்கான ஆன்லைன் வருகை பதிவேடு சான்று உள்ளது.
போலி ஆவணங்கள் மூலம், நடக்காத திருமண பதிவுச் சான்றிதழைக் காட்டி, தன்னுடன் சேர்ந்து வாழுமாறு டேனியல் என்னை மிரட்டுகிறார். எனவே, உண்மைக்கு புறம்பாக, கீழுர் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட திருமண பதிவு சான்றிதழை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், மனு தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பதிவாளர், கீழுர் சார் பதிவாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.