திருநெல்வேலி களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் குளத்தை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து பாதுகாக்க நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிட கோரி சுந்தரவேல் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அம்மனுவில், "நெல்லை மாவட்டத்தில் பல இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. கல்லிடைக் குறிச்சி ரயில் நிலையத்திலிருந்து, கன்னடியன் பாலம் வரை ஏராளமானோர் ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டியுள்ளனர். அதே போல அம்பாசமுத்திரம் ஆர்ச் முதல் ரயில் நிலையம் மற்றும் கல்லிடைக்குறிச்சி வரையும் பலர் ஆக்கிரமித்து வைத்துள்ளனர்.
இவற்றை அகற்றி, நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் எல்லைக் கற்கள் நிறுவி அரசு கையகப்படுத்த வேண்டும் என ஏற்கனவே பலமுறை அலுவலர்களிடம் மனு கொடுத்துள்ளேன். களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் எதிரே உள்ள நிலங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இந்த கோயிலின் குளத்தை ஆக்கிரமிக்கும் வகையில், குளத்தை நோக்கி சாலை வரும் வகையில் பாலம் ஒன்றை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர்.
இப்பகுதியில், உள்ள ஆக்கிரமிப்பாளர்களை காப்பாற்றும் வகையிலும், இந்த கோயில் குளத்தை மூடும் வகையிலும், பாலம் மற்றும் சாலையை சுற்றி வளைத்து அமைத்து வருகின்றனர். எனவே, நீதிமன்றம் இதில் தலையிட்டு கோயில் குளத்தை காப்பாற்ற வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் அம்பாசமுத்திரம் தாசில்தாரை இணைக்க உத்தரவிட்டனர். அத்துடன் இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளரும் பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.