கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளதால் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதம் வரை நீட்டிக்கக்கோரி வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் ராஜசேகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், "கடந்த மார்ச் மாதம், 1.34 கோடி நுகர்வோரில் 8.45 லட்சம் பேர் மின் கட்டணம் செலுத்தவில்லை. 343 கோடியே 37 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. 6.25 விழுக்காட்டினர் மட்டுமே செலுத்தவில்லை. 93.75 செலுத்திவிட்டனர்.
இதேபோல் ஏப்ரல் மாதம், 1.35 கோடி நுகர்வோரில், 90.5 விழுக்காட்டினர் செலுத்தியுள்ளனர். 287 கோடியே 94 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது. மே மாதம் 86.38 விழுக்காட்டினர் மின் கட்டணம் செலுத்திவிட்டனர். 478 கோடியே 36 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளது.
பெரும்பான்மையினர் மின் கட்டணத்தை செலுத்திவிட்டனர். ஊரடங்கில் இணைப்பு துண்டிக்கப்படவில்லை. சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் ஜூலை 15ஆம் தேதிவரை மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கனமழையால் வேரோடு சாய்ந்த 150 ஆண்டு பழமை வாய்ந்த மரம்