எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழ்நாடு முதலமைச்சர் களங்கமான தேசியக் கொடியைத் தான் ஆகஸ்டு 15ஆம் தேதி ஏற்றப் போகிறாரா? தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா? என தேசியக் கொடியை அவமதிப்பு செய்யும் வகையில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார்.
தேசியக் கொடியை அவமதித்தும், தமிழ்நாடு முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் தொடர்ந்து பேசி சமூக வலைதளங்களில் காணொலிகளாக வெளியிட்ட பாஜக பிரமுகருமான எஸ்.வி சேகர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் இணையவழி மூலம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில், தேசியச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம் பிரிவு 2இன் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக்கூறி, முன் பிணை கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வரவுள்ளதாக அறிய முடிகிறது. நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கேட்டு மனு தொடுத்திருப்பதை நெட்டிசன்கள் பல்வேறு மீம்ஸ்களை பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.