இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா நோய்த் தொற்று பாதிப்பு தணியாது பெருகிக் கொண்டிருக்கிறது. பொறியியல் கல்வி பயிலும் (B.E/M.E) மாணவர்கள் மற்றும் எம்.எஸ்சி மாணவர்கள் 3.9.2020ஆம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தைச் (ODD SEMESTER) செலுத்த வேண்டும்” என்றும்- “அவ்வாறு கட்டணம் செலுத்தாத மாணவர்களின் பெயர் பட்டியலை அறிவிப்புப் பலகையில் ஒட்டி, 7.9.2020ஆம் தேதிக்குள் அவர்களை நீக்கிவிட வேண்டும்” என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருக்கிறது.
இந்த அறிவிப்பு மனித நேயமற்றது; கண்டனத்திற்குரியது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இதுவரை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. பெரும்பாலான பெற்றோர் வருமானத்தை இழந்திருக்கிறார்கள்; குடும்பங்களில் பலர் வேலை இழந்திருக்கிறார்கள்; சிறு, குறு தொழில்கள் கடும் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது.
பொருளாதாரத்தை மீட்டு கொண்டிருக்கும் குடும்பங்களுக்கு - கல்விக்கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் விதித்துள்ள “மூன்று நாள் கெடு”, “ஏழு நாள் கெடு” என்பவை மிகுந்த வேதனை அளிக்கின்றது. ஆகவே, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சூழ்நிலைகளுக்கு பொருத்தமில்லாத இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற்று இந்த மாதம் இறுதி வரை நீட்டிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.