விழுப்புரம் : ஃபெஞ்சல் புயல் காரணமாக, பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நாளை ( டிச 2) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
நாளை காலை சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் முதலமைச்சர் மழையினால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிடுகிறார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
நீரில் மூழ்கிய வாகனங்கள் : ஃபெஞ்சல் புயல் நேற்று நள்ளிரவில் கரையை கடந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்திலே அதிகப்படியாக மைலத்தில் 51 செ.மீ அளவில் மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் மைலம், கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, பெரமண்டூர் போன்ற பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. தொடர் கனமழையில், சிங்கனூரில் உள்ள ஏரியின் மதகு உடைந்து மழை நீரானது அந்தப் பகுதியில் உள்ள டிராக்டர் கம்பெனிக்குள் புகுந்தது.
இதனால் டிராக்டர், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் நெல் அறுவடை வாகனங்கள் உட்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின. நீர் கம்பெனிக்குள் புகுந்தால், அங்குள்ள வாகனங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதில் கம்பெனி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : திருவண்ணாமலை வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து.. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்க 15 பயணிகள்!
வீடூர் அணை : கனமழையின் காரணமாக வீடூர் அணை அமைந்திருக்கும் பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 26 செமீ அளவிற்கு மழை பெய்து உள்ளது. இந்த மழை காரணமாக வீடூர் அணை தனது முழு கொள்ளளவான 32 அடியில் தற்போது 30.5 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளதால், அனையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தற்போது விநாடிக்கு 36 ஆயிரத்து 206 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், சங்கராபரணி ஆற்றின் கரையோரம் உள்ள பொம்பூர், கணபதிப்பட்டு, ரெட்டிக்குப்பம், எடையப்பட்டு, ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட 18 கிராம மக்களுக்கும், புதுச்சேரி மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனே பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : கனமழை காரணமாக, செஞ்சியில் வ.உ.சி நகரில் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், அப்பகுதியில் உள்ள பொதுமக்களை மீட்புப்படையினர் படகுமூலம் பத்திரமாக மீட்டனர்.