சென்னை : ஃபெஞ்சல் புயல் காரணமாக, கடந்த இரு நாட்களாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழையானது பெய்து வந்தது. கனமழையின் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் மழை நீரானது தேங்கியது. அரசு தரப்பில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழை காரணமாக, மெரினா கடற்கரை மணற்பரப்பில் தேங்கிய மழைநீரானது குளம் போல் காட்சியளிக்கின்றது. மெரினா கடற்கரையை காண்பதற்காக வந்த பொதுமக்கள் கடலின் அழகை ரசித்தும் மற்றும் அவர்களின் குழந்தைகள் மணற்பரப்பில் தேங்கிய மழைநீரில் குளித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.
இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் பேசிய விமல், "மெரினா கடல் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக வந்தோம். வந்து பார்த்த பின் தான் தெரிகிறது கடற்கரை மணற்பரப்பிலேயே அதிகளவு தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கின்றது. இது பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. மேலும், சிறுவர்கள் குளம் போல காட்சியளிக்கும் தண்ணீரில் ஆனந்தமாக குளித்து, விளையாடி மகிழ்கின்றனர்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருவண்ணாமலை வெள்ளத்தில் சிக்கிய அரசுப் பேருந்து.. பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்க 15 பயணிகள்!
இதையடுத்து பேசிய கோதண்டராமன், "புயல் நின்று விட்டதால், மெரினா கடற்கரை எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக வருகை புரிந்தோம். ஆனால் கடற்பரப்பின் முன்பகுதியிலேயே அதிகளவு மழைநீர் தேங்கியதால், அது பார்ப்பதற்கு குளம் போல காட்சியளிக்கின்றது. அதில் சிறுவர்கள் அனைவரும் விளையாடி மகிழ்கின்றனர்.
மெரினா கடற்கரை பார்பதற்கே அழகாக உள்ளது. இந்நேரத்தில் கடலில் உள்ள செல்ல முடியாது என்பதால், மணலின் முன்பகுதியில் தேங்கி உள்ள மழைநீரில் குழந்தைகள் விளையாடி வருகின்றனர். இங்கு தேங்கி இருக்கின்ற மழைநீர் சுத்தமானதாகும்" என தெரிவித்தார்.