பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி, அக்கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இணையவழியில் நடைபெற்றது. இதல் பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ராமதாஸ், "பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 31 ஆண்டுகள் முடிவடைந்து 32 ஆவது ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால், நாம் இன்னும் இலக்கை அடைய முடியவில்லை. இதற்குத் தற்போது, கரோனா வைரஸ் ஒரு தடையாக அமைந்துவிட்டது. கரோனா வைரஸ் முடிவடைந்தவுடன், நாம் அனைவரும் இலக்கை அடைய கூடுதலாக 10 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றவேண்டும்.
சமூக நீதியில் நமக்கு இணையானவர்கள் எவரும் இல்லை என்பதால் தான், இட ஒதுக்கீடு என்பதற்கு பதிலாக இடப்பங்கீடு என்று சொல்லத் தொடங்கியிருக்கிறோம். எங்களுக்கு யாரும் இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை. இட ஒதுக்கீடு விஷயத்தில் நமக்குத் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. நீட் தேர்வு வரை பல்வேறு துரோகங்கள் நமக்கு இழைக்கப்பட்டு வருகின்றன.
பாமக கொள்கைகளுக்கு இணையாக வேறு எந்தக் கட்சிக்கும் கொள்கை கிடையாது. அனைத்து விஷயங்களிலும் அரசுக்கு நாம் ஆலோசனைகளைக் கூறி வருகிறோம். நமது ஆலோசனைகள் ஏற்கப்படுகின்றன. நாம் போராடி பல உரிமைகளைப் பெற்றுள்ளோம். ஆனால், நாம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் போராடிக் கொண்டும், ஆலோசனைகளை வழங்கிக் கொண்டும் இருப்பது? மக்களுக்குத் திட்டங்களை செயல்படுத்த நாம் ஆட்சிக்கு வர வேண்டும்.
சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ தான், குடிசைகளாக இருந்த சிங்கப்பூரை இன்றைய நவீன சிங்கப்பூராக மாற்றினார். தமிழ்நாட்டில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் லீ குவான் யூவை விட சிறந்த ஆட்சியைத் தருவார். தமிழ்நாட்டில் அவரைவிட சிறந்த ஆட்சியை யாராலும் தர முடியாது.
நம்மிடம் இருக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்கள் வேறு கட்சிகளிடம் இல்லை. நமது தொண்டர்கள் அளவுக்கு உழைக்க வேறு எந்தக் கட்சியிலும் தொண்டர்கள் இல்லை. நாம். இலக்கை அடைய இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்" என உரையாற்றினார்.