நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் விவேக் ரவிராஜ் மீது மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூரைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் அளித்த புகாரின்படி, உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அண்மையில் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இதையடுத்து, இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றி காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.
வழக்குப்பதிவு செய்தபோது வில்லியநல்லூரைச் சேர்ந்த மகாகணபதி, அழகேசன் ஆகியோர் தன்னை வாகனத்தை வைத்து மோதி கொலைசெய்ய முயற்சித்ததாக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களில் பாதிக்கப்பட்ட இளம்பெண் பதிவுசெய்திருந்திருந்தார்.
இந்நிலையில், வில்லியநல்லூர் ஊராட்சி அதிமுக செயலாளராகவும், தலைஞாயிறு என்.பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் இயக்குநராகவும் உள்ள மகாகணபதி நேற்று மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்மீது பொய்யாக குற்றம்சாட்டியதாக சுபஸ்ரீ மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய அவர், "சுபஸ்ரீக்கு ஏற்கனவே வில்லியநல்லூரைச் சேர்ந்த மணிகண்டன், மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞர், ஆக்கூரைச் சேர்ந்த விக்னேஷ் எனப் பலருடன் பழக்கம் இருந்தது.
தற்போது ஃபேஸ்புக் மூலம் பழகி காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது வழக்குத் தொடுத்துள்ளார். விவேக் ரவிராஜ் தன்னுடன் உறவு வைத்துவிட்டு, கருவைக் கலைத்ததாக சுபஸ்ரீ அளித்த புகாரில் உண்மை இல்லை என்று மயிலாடுதுறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பிறகு உயர் நீதிமன்றத்தில் மேல்றையீடு செய்து தற்பொழுது விவேக் ரவிராஜ் மீது வழக்குப்பதிவு செய்யவைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் எங்கள் மீது குற்றம் சுமத்தி, எங்களது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார். இந்தப்பெண்ணால் எங்கள் ஊருக்கே அவமானமாக உள்ளது. இது குறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.