கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரங்கங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை ஏழு மாதங்களான மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வவ்போது அமல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, அருங்காட்சியகங்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்படலாம் என, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, உலகப்புகழ் பெற்ற மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று (நவ.10) பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. இதுகுறித்து காந்தி நினைவு அருங்காட்சியகத்தின் இயக்குநர் நந்தாராவ் கூறுகையில், தமிழ்நாடு அரசு விதித்த அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி காந்தி நினைவு அருங்காட்சியகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 நபர்களுக்கு மட்டுமே உள்ளே அனுமதி என்ற விதிமுறையை நாங்களே வகுத்துக் கொண்டு, அதனடிப்படையில் பார்வையாளர்களை அனுமதித்து வருகிறோம் என்றார்.
![மக்கள் பார்வைக்காக மீண்டும் திறந்து விடப்பட்ட காந்தி மியூசியம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/gandhi-musuem-1_1011newsroom_1604993200_419.jpg)
இதேபோன்று மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகமும் இன்று(நவ.10) திறக்கப்பட்டது. இதுகுறித்து அதன் காப்பாட்சியர் முனைவர் மருது பாண்டியன் கூறுகையில், தமிழ்நாடு அரசின் 626 ஆவது அரசாணையின்படி, இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அருங்காட்சியங்கள் திறக்கப்படுகின்றன. கிருமிநாசினி, முகக்கவசம், தகுந்த இடைவெளி உள்ளிட்டவையை உறுதியாகக் கடைபிடித்து, அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.
இங்கு வரும் பார்வையாளர்களிடமிருந்து கட்டணமாகப் பணத்தை நேரடியாக பெறாமல், 'கியூ ஆர் ஸ்கேனர்' மூலமாக கட்டணம் பெறப்படுகிறது. நாளொன்றுக்கு இரண்டு முறை கிருமி நாசினி கொண்டு காட்சிக்கூடங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்படுகின்றன. பார்வையாளர்கள் நலன் கருதி, மேற்குறிப்பிடப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு பொது மக்கள், பார்வையாளர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார்.
கடந்த 1959ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி அன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவால் திறந்துவைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகமானது, ஐ.நா. சபையில் உலகின் அமைதிக்கான அருங்காட்சியகங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவின் சுதந்திர போராட்டங்கள் குறித்த படங்கள், காட்சி வடிவிலான காந்தியின் வாழ்க்கை வரலாற்று கதை, அவர் பயன்படுத்திய பொருள்கள் என மகாத்மா காந்தியை சார்ந்த பல்வேறு அறிந்திராத தகவல்கள் உள்ளடக்கிய இடமாக மதுரை மகாத்மா காந்தி நினைவு அருங்காட்சியகம் உள்ளது.
குறிப்பாக, காந்தியடிகளின் பிறப்பு முதல் இறுதி நிகழ்வு வரையிலான மொத்த வரலாறும் கொண்ட 124 அரிய புகைப்படங்கள் வாயிலாக ஒளி வடிவில் வாழ்க்கை வரலாறு இங்கு காட்சிப்படுத்தப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த காந்தி மியூசியம் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்தது.
தற்போது, மதுரை மாநகரில் கரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டிருக்கும் சூழலில் காந்தி மியூசியம் இன்று முதல் மக்கள் பார்வைக்கு திறந்து விடப்படுவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சமூக இடைவெளியை கடைப்பிடித்து கையுறை, முகக் கவசம் ஆகியவற்றை அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று காந்தி மியூசியம் நிர்வாகம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.