மதுரை மாவட்டம் விரகனூர் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மதன்ராஜ் (27). இவர் அலுமினிய கதவுகளுக்கு கண்ணாடி பதிக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.
இவர் இன்று பிற்பகல் மூன்று மணி அளவில் விரகனூர் அடுத்த ஐராவதநல்லூர் அருகே சாலையோரத்தில் உள்ள தடுப்புச் சுவரின் மீது அமர்ந்திருந்தார். அப்போது அவ்வழியாக மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு மதன் ராஜை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
சரமாரியாக வெட்டியதால் மதன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த சம்பவத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர், அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மதன்ராஜ் உடலைக் கைப்பற்றி மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ஆறு பேர் கொண்ட கும்பலில் இருவர் மதுரை கோரிமேடு பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், கண்ணன் மற்றும் விரகனூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜா ஆகியோர் என்பது தெரியவந்துள்ளது.