முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் இது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவுக் காரணமாக மருத்துவ சிகிச்சைப் பெறவேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, சிகிச்சைப் பெற அனுமதித்த உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த செப்டம்பர் மாதம் பரோல் அளித்தது.
பரோலில் வெளியே வந்த அவருக்கு சிறுநீரக பிரச்னை தீவிரமான காரணத்தால், மருத்துவர்களின் அறிவுறுத்தலின்பேரில் அதற்காக மேலதிக சிகிச்சை பெற பரோலை மீண்டும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் இரண்டு வார காலம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பேரறிவாளனுக்கு ஆதரவாகவும், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தி கோவையில் நேற்று (நவ.18) 161 என்ற ராப் பாடல் (சொல்லிசைப் பாடல்) வெளியிடப்பட்டது.
இந்நிலையில், பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசுக்கும், தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கும் கோரிக்கை விடுத்து இன்று (நவ.19) #ReleasePerarivalan என்ற ஹேஷ்டேக் காலையில் இருந்து ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
அரசியல் கட்சித் தலைவர்கள் டி.டி.வி. தினகரன், ராமதாஸ், தொல்.திருமாவளவன், சீமான், பேரா.ஜவாஹிருல்லா, தெஹ்லான் பார்கவி, வேல்முருகன், தனியரசு, கருணாஸ், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, ராம், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், கார்த்திக் சுப்புராஜ், மாரிசெல்வராஜ், மிஷ்கின், திரைப்பட நடிகர்கள் நடிகர் சத்யராஜ், விஜய் சேதுபதி, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பொன்வண்ணன் உள்ளிட்டோர் இந்த பரப்புரைக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளனர்.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவிப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் கருணை மனு மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.