செங்குன்றம் பகுதியில் இருந்து அயனம்பாக்கத்திற்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை வழியாக தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி கொண்டு ஆட்டோவில் வருவதாக அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினருக்கு நேற்று மாலை ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து காவல்துறை துணை - ஆய்வாளர் நாட்டாலம்மை தலைமையில் காவல்துறையினர் அம்பத்தூர் ஐ.சி.எப் காலனி திருப்பதி குடை ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு ஆட்டோவை கண்டு சந்தேகமடைந்த காவல்துறையினர், அதனை இடைமறித்து சோதனை செய்தனர். அதில், குட்கா பொருட்கள் அட்டை பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் ராஜேந்திரனை கைது செய்த காவல்துறையினர் கடத்தப்பட்ட 110கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர், ராஜேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், ராஜேந்திரனுக்கு குட்கா பொருட்களை சப்ளை செய்த முக்கிய வியாபாரியை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.