திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கே. அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா காலனி, ஏ.டி காலனி ஆகிய பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு பலமுறை பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து இந்திரா காலனி, ஏ.டி காலனி ஆகிய பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கே. அய்யம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அத்திக்கடவு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும், 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் குட்டை தூர் வாரப்பட வேண்டும், ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து தகவலறிந்து வந்த ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர் இளைஞர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் இப்பிரச்னை தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததையடுத்து இளைஞர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்