திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (37). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுகாசினி (34), மகன் நவநீத் (13) இருவருடனும் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், நேற்று (ஜூலை 22) மதியம் தாராபுரத்தில் உள்ள தனது தந்தைக்கு போன் மூலம் அழைத்த ராம்குமார் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது மகனை பத்திரமாக பார்த்துக்கொள் என சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதன் பிறகு தனது முகநூல் பக்கத்தில் லைவ் வீடியோவை ஆன் செய்த ராம்குமார் துணி ஒன்றை எடுத்து தனது கழுத்தில் சுத்திக்கொண்டு பேனில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் முகநூலில் நேரடியாக ஒளிபரப்பானது.
இதனைக்கண்ட அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சுகாசினி நேரில் சென்று பார்த்த போது ராம்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், "தனது இறப்பிற்கு யாரும் காரணமில்லை. மானம் கெட்ட உலகம் இதில் வாழ எனக்கு விருப்பமில்லை. இந்த உயிர் மயிருக்கு சமம். யாரும் கவலைபடாதீர்கள்" என எழுதி வைத்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முகநூலில் நேரலையாக தற்கொலை செய்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![ராம்குமார் எழுதி வைத்த கடிதம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpr-01-driversuicide-facebooklive-vis-7204381_23072020104946_2307f_1595481586_502.jpg)
இதையும் படிங்க: கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து: குழப்பத்தில் இறுதியாண்டு மாணவர்கள்!