தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்பவர், கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் ஆர்வம் இருந்து வந்துள்ளது. அதிகப்படியான பணத்தை விளையாடி இழந்து வந்துள்ளார். தமிழ்நாடு அரசு இணையதள சூதாட்டத்தை தடை செய்த பிறகும், சட்டவிரோதமாக அந்தக் கேமை பதிவிறக்கம் செய்து விளையாடியுள்ளார். கணக்கிட்டதில், கடந்த 4ஆம் தேதி வரை 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் வரை இழந்துள்ளதாக தெரியவருகிறது.
இதனால், அதிகப்படியான மன உளைச்சலுக்கு ஆளான அவர், திருப்பூர் வந்து திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 2 நாள்களுக்கு முன்பு தற்கொலை செய்தநிலையில், அடையாளம் தெரியாத நிலையில் ரயில்வே காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியதன் அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் ஒத்து போயிருந்த சூழ்நிலையில் அவரை அடையாளம் கண்டுள்ளனர்.
தற்போது, அவரது உடல் உடற்கூராய்வுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் தொடருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.