தமிழ்நாட்டில் பொது ஊடரங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகளை மூட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மே 17ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது, ஆன்லைனில் மட்டும் மது விற்பனையைத் தொடரலாம் என்றும் உத்தரவில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புது காவல் நிலைய வீதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் துரை, வடிவேல் ஆகிய இருவரும் சேல்ஸ்மேன்களாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள், இருவரும் நேற்று (மே.8) மது விற்பனை நேரம் முடிந்த பின்னர், நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் மது பானங்களை மாருதி 800 காரில் கடத்தி சென்றுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் சென்ற காரை தடுத்து நிறுத்தி தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுவிலக்கு அமலாக்கத் துறை ஆய்வாளர் வெங்கடேசன், சேல்ஸ்மேன்கள் இருவரையும் கைது செய்து மது பாட்டில்களையும் அதை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய மாருதி காரையும் பறிமுதல் செய்தார்.
இதனையடுத்து, சேல்ஸ்மேன் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கடையில் இருப்பு மற்றும் விற்பனை செய்த தொகை ஆகியவற்றை கணக்கில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளும் - அரசுக்கு வருவாய் இழப்பும்!