திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் இந்த ஆண்டு பருவமழை ஏமாற்றியதால் அணையில் வறட்சி ஏற்பட்டது. தற்போது கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழையால் அமராவதி அணையின் நீர் ஆதாரங்களான பாம்பாறு, சின்னாறு, தேனாறு உள்ளிட்ட ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகமானது.
கடந்த வாரம் பெய்த சாரல்மழை காரணமாக 460 கனஅடியாக வந்துகொண்டிருந்த தண்ணீர், மூணாறு, மறையூர் உள்ளிட்ட கேரள பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழை காரணமாக 860 கனஅடியாக அதிகரித்தது.
இதனால், மொத்தமுள்ள 90 அடியில் 36 அடியாக இருந்த நீர்மட்டம் ஒரே நாளில் 38 அடியாக உயர்ந்தது. ஆர்ப்பரித்துவரும் தண்ணீரால் திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.