திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த கவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக பல்லடம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திக்ஷா மிட்டல் உத்தரவின் பேரில் பல்லடம் துணை கண்காணிப்பாளர் முருகவேல் மேற்பார்வையில் பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் விஜயகுமார், அமல் ஆரோக்கிய தாஸ் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கவுண்டம்பாளையத்தில் உள்ள தோட்டத்து சாலையில் இருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கு சோதனை மேற்கொண்டதில் பானையில் ஊறல் ஏற்படுத்தி சாராயம் காய்ச்சி வருவது தெரிய வந்தது. இதனை அடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர் அங்கிருந்த சாராயம், குடுவை, ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும், கள்ளச்சாராயம் தயாரித்த யோகேஷ் குமார், ராஜகோபால் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கல்வராயன் மலையில் தொடரும் கள்ளச்சாராய வேட்டை!