நிலம் வாங்குவது, விற்பது, கிரையம் செய்வது, பெயர் மாற்றுவது, திருத்தம், வில்லங்கம் உள்பட பல்வேறு பணிகளுக்காக தினமும், நுாற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரப்பதிவு துறையைச் சார்ந்துள்ளனர். பணப்புழக்கம் அதிகம் உள்ள திருப்பூர் மாவட்டத்தில், பிற மாவட்டங்களை காட்டிலும், பத்திரப்பதிவுகள் அதிகம்.
இங்கு தனித்தனியாக செயல்பட்ட நான்கு அலுவலங்களை ஒருங்கிணைத்து, நகரப் பகுதியில் இருந்து, 10 கி.மீ., தள்ளி, நெருப்பெரிச்சல் பகுதியில் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் கட்டப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதில், மாவட்ட பதிவாளர் அலுவலகம், இணை பதிவாளர் அலுவகம் எண் -1, 2, தொட்டிபாளையம் சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்தநிலையில், பத்திரப்பதிவு அலுவலகத்தில் 'ஆன்லைன்' மூலமாக கட்டப்படும் பதிவு கட்டணங்களுக்கு போலி ரசீது மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்ததாகப் புகார் எழுந்தது .
இதில் சொத்து கிரயம், விற்பனை உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக அலுவலகத்துக்கு வரும் நபர்களிடம் நேரடியாக பணத்தைப் பெற்று கொண்டு, ஏற்கனவே பணத்தை கட்டியவர்களின் விவரங்களை காட்டி கோடிக்கணக்கான ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.
இது குறித்து தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் சங்கர் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில், கோவை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் ஜெகதீசன், தலைமையிலான காவல்துறையினர் திருப்பூரில் ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில் முறைகேடு நடந்திருப்பது தெரிய வந்ததை அடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஏழு பேர் ஏற்கனவே பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட பத்திரப்பதிவாளர் ராமசாமி, காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில், மத்திய மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினர் திருப்பூர் இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்த சங்கர், தனியார் தட்டச்சு நிறுவனம் நடத்தி வந்த ஜெய்சங்கர் ஆகியோரை கைது செய்து விசாரித்தனர்.
இதில், இருவரும் கூட்டாகச் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டு அரசுக்கு செலுத்தவேண்டிய 68 லட்சத்து 93 ஆயிரம் ரூபாயை ஏமாற்றி இருப்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பத்திரப்பதிவு சாத்தியமில்லை: பத்திர எழுத்தாளர்கள் கவலை