திருப்பூர் அவிநாசி சாலை தண்ணீர் பந்தல் பகுதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று இங்கு தங்க நகைகளை அடகு வைக்க வேலம்பாளையத்தைச் சேர்ந்த சுதிர் குமார் (30), அவினாசி அருகே உள்ள செய்யூரை சேர்ந்த லீலாவதி (36) ஆகியோர் வந்தனர். அப்போது, லீலாவதி 20 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.50 ஆயிரம் பணம் கேட்டுள்ளார். நிதி நிறுவன ஊழியர்கள் தங்கத்தை வாங்கி சோதனை செய்ததனர். அப்போது அந்த நகைகள் கவரிங் நகைகள் தங்க முலாம் பூசப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து, நிதி நிறுவன ஊழியர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுதிர் குமார், லீலாவதி ஆகிய இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார். இருவரும் ஒரு பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இதே நிதி நிறுவனத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் தங்க முலாம் பூசப்பட்ட நகையை அடகு வைத்து கடன் பெற்றதும் தற்போது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.