திருப்பூர் மாவட்டத்தில் குண்டடம், கொடுவாய், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் சின்ன வெங்காயத்தை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்து உற்பத்தி செய்தனர். அந்த வாரத்தில் விலை இறக்கம் காரணமாக விற்பனையில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், அறுவடை செய்த சின்ன வெங்காயத்தைச் சேமித்து வைத்து தற்போது விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.
கடந்த மாதம் ரூ.12க்கு கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தற்போது 30 முதல் 35 ரூபாய் வரை அதிகரித்து வியாபாரிகளிடம் வாங்கப்படுவதால் கடந்த வாரத்தின் விலை வீழ்ச்சியினால் ஏற்பட்ட நஷ்டம் ஓரளவுக்கு கட்டுப்படி ஆவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தினை பாதுகாக்க குண்டடம் பகுதியில் சேமிப்புக் கிடங்கு ஒன்றை அமைத்தால் உற்பத்தி அதிகமாகும் காலங்களில் சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும் போது விற்பனை செய்தால் அதற்கான விலையும் நிலையாக இருப்பதோடு விவசாயிகளும் நஷ்டம் அடையாமல் இருக்க, இப்பகுதியில் சேமிப்புக் கிடங்கை ஏற்படுத்தித் தர வேண்டும் என விவசாயிகள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.