திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில், கண்டெய்னர் லாரியும் கேரள அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த விபத்திற்கு கண்டெய்னர் லாரி ஓட்டுநரின் அலட்சியம்தான் காரணம் என்று கூறப்படும் நிலையில், அவர் தப்பியோடியுள்ளார். விபத்தில் இதுவரை ஆறு பெண்கள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர்; 23 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் இணைந்து உயிரிழந்தவர்களையும் பேருந்தில் சிக்கியவர்களையும் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சூழலில் நிகழ்விடத்திற்குச் சென்ற நேரில் பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் விபத்து குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விபத்து குறித்து கேரள அரசிடம் தெரிவித்துள்ளோம். கேரள அரசு, மீட்புக் குழுவினரை இங்கு அனுப்பிவைப்பதாகக் கூறியுள்ளது. அவர்கள் வந்த பின், உயிரிழந்தவர்களின் உடல் அடையாளம் காணப்பட்டு ஒப்படைக்கப்படும். தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில், காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. தப்பியோடிய ஓட்டுநரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்” என்றார்.
இதையும் படிங்க: அவினாசி கோர விபத்து: உயிரிழப்பு 20ஆக உயர்வு; மீட்புப் பணிகள் தீவிரம்