பின்னலாடைத் தொழில் மூலமாக உலக அளவில் புகழ்பெற்ற ஊர் திருப்பூர். வாழ்க்கையை இழந்தவர்களுக்கு வாழ்வளிக்கும் ஊராக இருந்து வருகிறது. திருப்பூருக்குச் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் திருப்பூர் வருகின்றனர்.
உழைப்பை செலுத்தினால் உன்னத நிலையை அடைய முடியும் என்பதே திருப்பூரின் நிலை. தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில தொழிலாளர்களும் திருப்பூரிலுள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகிறார்கள்.
திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டுகளை கொண்டது. இங்கு 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர வெளிமாநில தொழிலாளர்கள் மூன்று லட்சம் பேர் உள்ளனர். கரோனா காரணமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டனர்.
ஊரடங்கு தளர்வுக்குப் பின் தொழில் நிறுவனங்கள் திறந்து செயல்படத் தொடங்கியது முதல், வெளி மாவட்ட, வெளிமாநில தொழிலாளர்கள் திருப்பூர் நோக்கி திரும்பியிருக்கிறார்கள். 100 விழுக்காடு தொழிலாளர்களைக் கொண்டு தொழில் நிறுவனங்கள் இயங்க தமிழ்நாடு அரசு அறிவித்து. அதன் பயனாக பின்னலாடை நிறுவனங்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன.
இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு:
அரசு போக்குவரத்து முழுவீச்சில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு நாளுக்கு நாள் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் திருப்பூரில் அதிகரித்து விட்டனர். தொழிலாளர்கள் பெரும்பாலும் தங்கள் பணியாற்றும் நிறுவனங்களுக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். அதேபோல் தொழில் பகுதி என்பதால் பெரும்பாலானவர்கள் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக சாலைகளில் எப்போதும் வாகன நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக குமரன் ரோடு, அவிநாசி, காங்கேயம், தாராபுரம், பல்லடம் பகுதிகளில் எப்போதும் சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாகவே காணப்படுகிறது. வேலை நாள்களில் காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் ஊர்ந்து செல்வதை காணமுடிகிறது. சனிக்கிழமை அன்று வழக்கத்திற்கு மாறாக சாலைகளில் வாகன நெருக்கடி அதிகரித்துவிடுகிறது.
வாகன நெருக்கடிக்கு ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணம்:
பின்னலாடை தொழிலை பொருத்தவரை ஒரு ஆடையை தயாரிக்க பல்வேறு நிறுவனங்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதனால், ஆடை தயாரிப்புக்கு அருகிலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு வாகனங்களில் ஆடைகளை கொண்டு செல்ல வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் ஆடைகளை அனுப்பி வைக்க வேண்டும். இங்கு காலம் முக்கியமானதாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட நேரத்தில் ஆடைகளை ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கு கொண்டு செல்வதற்காக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் விரைந்து செல்லும் போக்கு நிலவி வருகிறது.
இவை அனைத்தும் மாநகரில் வாகன நெருக்கடியை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாநகரிலிருந்த பிரதான சாலைகள் இன்னும் விரிவு படுத்தப்படாமல் உள்ளது.
சாலையோர ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், போதுமான இடவசதி இன்மை போன்றவை சாலை விரிவாக்கத்திற்குத் தடையாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளால் பல்வேறு இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு, சரி செய்யப்படாமல் இருக்கிறது. வாகன நெருக்கடி இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகள் முக்கிய காரணமாக இருப்பதாகவும் வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
பொதுமக்களை வாட்டி வதைக்கும் நகரம்:
இது குறித்து வாகன ஓட்டி சௌந்திரபாண்டியன் கூறுகையில், “திருப்பூர் மாவட்டத்தில் தற்போது வாகனங்கள் அதிகரித்துள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்பட்டுள்ளது. நான் இரண்டு கிலோ மீட்டர் பயனம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு 25 நிமிடங்கள் ஆகிறது.
மேலும், குறுகலான பாதையில் செல்லும்போது வாகங்கள் செல்லமுடியாத நிலை ஏற்படுகிறது. நான்கு கிலோ மீட்டர பயணம் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது 30 நிமிடங்கள் தேவைப்படுகிறது.
திருப்பூர் தொழில் வளர்ச்சி நிறைந்த நகரமாக இருந்தாலும் கூட ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள குழிகளால் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நகரமாக மாறி வருகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்தால் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
காவல் துறைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்:
இது குறித்து போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் பாண்டியராஜன் கூறுகையில், “மாநகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இதில், குறிப்பாக கனரக வாகனங்கள் மாநகருக்குள் காலை மாலை நேரத்தில் நுழையவிடாமல் தடுக்கப்படுகிறது.
பல்வேறு இடங்களில் சிக்னல்கள் அமைத்து, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தப்பட்டு சரி செய்யப்படுகிறது. மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களும் காவல் துறைக்கு ஒத்துழைக்கும் பட்சத்தில் தான் இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்ய முடியும்” என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்து போலீசாருக்கு புதிய எல்.இ.டி., கைக்கருவிகள் வழங்கல்!