திருப்பூர்: தக்காளி விலையைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அமமுக கொடியேற்று விழாவில் பெண்களுக்கு தக்காளிப் பழங்களை இலவசமாக வழங்கினார், முன்னாள் மேயர் அ.விசாலாட்சி. அப்போது லட்டு வாங்க ஆர்வம் காட்டாத நிலையில், பெண்கள் ஆர்வமுடன் தக்காளியை ஆளுக்கு இரண்டாக வாங்கிச்சென்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கொடியேற்று விழா திருப்பூர் காந்தி நகரில் நேற்று(ஜூலை 9) நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் மேயருமான அ.விசாலாட்சி கலந்து கொண்டு அமமுக கொடியினையேற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காந்தி நகர் பகுதி கழகச்செயலாளர் சுதாகர் முன்னிலை வகித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், அ.விசாலாட்சி. பின்னர், அனைவருக்கும் இனிப்புகளையும் வழங்கினார். அப்போது பொதுமக்களுக்கு முன்னாள் மேயர் அ.விசாலாட்சி தக்காளிகளை இலவசமாக வழங்கினார்.
இதையும் படிங்க: ரூ.400 கோடி டிரான்ஸ்ஃபார்மர் ஊழல்: மறுப்புத் தெரிவித்த மாநில அரசுக்கு அறப்போர் இயக்கம் பதிலுரை!
இனிப்பு வழங்கியபோது சாதாரணமாக வாங்கிச்சென்ற நிலையில், தக்காளியைக் கண்டதும் பெண்கள் ஆர்வமுடன் சென்று ஆளுக்கு இரண்டாக வாங்கிச்சென்றனர். பெண்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கிச் சென்றதால் தக்காளித்தட்டு ஒரு நிமிடத்தில் காலியானது.
விண்ணைத் தொடும் தக்காளி விலை உயர்வில் மக்கள் சிரமம் படுவதை கவனத்தில் கொண்டு தமிழக அரசு பொதுமக்களுக்கு அனைத்து பகுதியிலும் குறைந்த விலையில் தக்காளி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர், பல்லடம், தாராபுரம் பகுதிகளில் தக்காளியின் விளைச்சல் அதிகம் உள்ள போதும் தக்காளி விலை குறையவில்லை. தமிழகம் எங்கும் தக்காளி விலை உநர்ந்த நிலையில் திருப்பூரில் தக்காளி விலை கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
இதனால், தக்காளியைப் பொதுமக்கள் சிக்கனமாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி விலை அதிகம் உள்ள நிலையில் தக்காளியை இலவசமாக தந்தமையால் அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
இதையும் படிங்க: அதிரடி ஆஃபர் அறிவித்த பிரியாணி கடை; ஆப்பு வைத்த மாவட்ட ஆட்சியர்!