திருப்பூர்: நூல் விலை அதிகரிப்பு மற்றும் பாலிஸ்டர் நூல் வரத்து அதிகரிப்பு போன்றவற்றால் பின்னலாடை தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என சிறு குறு உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முகமது சபி தெரிவித்துள்ளார். சங்க நிர்வாகிகள் கூட்டத்திற்குப் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, “திருப்பூரில் உள்ள பெரும்பாலான பின்னலாடை நிறுவனங்கள் காட்டன் ரகங்களை மட்டுமே நம்பி தொழில் செய்து வரும் நிலையில் நூல் விலை ஏற்றத்தின் காரணமாக, தற்போது செயற்கை நூலான பாலிஸ்டர் ரகங்கள் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
பாலிஸ்டர் ஆடைகள் வடநாட்டில் அதிகளவில் உற்பத்தி செய்வதால், வட மாநிலத்தில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவர்களது மாநிலத்திலேயே உற்பத்தியை அதிகப்படுத்தியதன் காரணமாகக் கடந்த காலங்களில் திருப்பூரில் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வந்த உள்நாட்டு உற்பத்தியானது தற்போது மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதே நிலை நீடித்தால் இரண்டு ஆண்டுகளில் திருப்பூரில் உள்நாட்டு உற்பத்தி என்பது இல்லாத நிலை ஏற்பட்டு விடும்.
தமிழக அரசு வெளி மாநிலத்தில் இருக்கும் பல்வேறு துறையினருக்குத் தமிழ்நாட்டில் தொழில் துவங்குவதற்கான அழைப்பு விடுத்துள்ள நிலையில், திருப்பூரில் பனியன் தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கானோரின் நலனைக் கருத்தில் கொண்டு மின் கட்டண உயர்வைக் குறைக்க வேண்டும்.
பீக் ஹவர் என்ற வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை நிர்ணயம் செய்து கூடுதலாகக் கட்டணம் உயர்த்தியதன் காரணமாக உற்பத்தி தொழில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளது. எனவே, மின் கட்டணத்தைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு; திருப்பூரில் மனிதச் சங்கிலி போராட்டம்.. தொழில்துறையினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கோரிக்கை!