திருப்பூர் : 35 ஆயிரம் விதைப்பந்துகளில் இந்திய வரைபடத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார் சர்வேஷ் என்ற மாணவர். 10 நிமிடங்களில் 126 யோகா முத்திரைகளை செய்து அசத்தினார் 3ஆம் வகுப்பு மாணவி சமுத்ரநதி. திரும்பிய பக்கமெல்லாம் மாணவர்களின் சாதனை முயற்சிகளால் நிரம்பி வழிந்தது, திருப்பூரில் உள்ள தனியார் பள்ளி. இக்கல்வி குழுமத்தின் 25ம் ஆண்டு விழாவையொட்டி, இந்த உலக சாதனை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
12ஆம் வகுப்பு மாணவி ரிஷிகா பதானி தொடர்ச்சியாக 14 மணி நேரம் கரோனா பற்றி விரிவுரை வழங்கி உலக சாதனை நிகழ்த்தினார். 6ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த் 70 புத்தகங்களை தொடர்ச்சியாக 7 மணி நேரம் மதிப்பாய்வு செய்து உலக சாதனை நிகழ்த்தினார். 2 ஆம் வகுப்பு மாணவி சிரோஸ்ரீ நந்தன் தொடர்ச்சியாக 2 மணி நேரங்களில் 60 ஓவியங்களை வரைந்து உலகசாதனையை நிகழ்த்தினார்.
இதே போல, 7 ஆம் வகுப்பு மாணவி ஹேமாக்ஷா 326 ஓரிகாமி காகித வடிவங்களை 2 மணி நேரத்தில் செய்து காட்டி சாதனை நிகழ்த்தினார். 7 ஆம் வகுப்பு மாணவர் விதுர்வைபவ் என்பவர் 14 மணி நேரங்கள் தொடர்ச்சியாக 120 உணவு வகைகளை தயாரித்து சாதனை படைத்தார். 8 ம் வகுப்பு மாணவன் யோகேஷ் ஜோவி, 11ஆயிரத்து 400 காகித டம்ளர்களை அடுக்கி வைத்து பூமிக்காக மரம் நட வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தி உலக சாதனை நிகழ்த்தினார்.
1ஆம் வகுப்பு மாணவன் அத்வைத் 30 நிமிடங்களில் சிக்கலான புதிர்களுக்கு விடையளித்து உலகசாதனை நிகழ்த்தினார். இந்த உலக சாதனைகளை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் அங்கீகரித்து சான்றுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வமுடன் நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். பல்வேறு விதமாக 50 உலக சாதனைகளை நிகழ்திய மாணவர்களுக்கு பலர் பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர். எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், ஏசியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி, இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி மற்றும் தமிழன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.
பள்ளி தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், இணை செயலாளர் வைஷ்ணவி ஆகியோர் மேற்பார்வையில் உலக சாதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.தொடக்க விழாவில் முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் நாராயணசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதையும் படிங்க : முதியோர் உதவித்தொகை ரூ.1200 ஆக உயர்வு: அமைச்சர் தங்கம் தென்னரசு