கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பின்னலாடை உள்ளிட்ட பிற தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இவர்களை அமைதிப்படுத்தும் நோக்கத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம், நான் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் பேசுகிறேன். நீங்கள் அனைவரும் வெகு தொலைவிலிருந்து இங்கே வந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். மனதளவில் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படும் உங்களுடைய எண்ணங்கள் புரிகிறது. அதற்கு தற்பொழுது தேவையான பணிகளை அனைத்தும் அரசாங்கம் செய்து வருகிறது. சிலர் உங்களுக்கு டிக்கெட் தருகிறோம் என கேட்பார்கள், அதை கேட்டு ஏமாற வேண்டாம். அது புரளி. இப்பொழுதுவரை அரசாங்கத் தரப்பில் அப்படி எதுவும் வழங்கப்படவில்லை. சிலருக்கு வழங்கி விட்டார்கள் என்று வரும் புரளியை நம்ப வேண்டாம். உங்களுக்கு எந்த தகவலாக இருந்தாலும் மாவட்ட நிர்வாகம் சார்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை பின்னலாடை நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், தேங்காய் எண்ணெய் உற்பத்தி, ஸ்பின்னிங் மில் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் சுமார் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். தற்போது அமலில் உள்ள கரோனா ஊரடங்கின் காரணமாக பல்வேறு தொழில்களும் முடங்கியுள்ள நிலையில், அனைவருக்கும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து தடையும் அமலில் உள்ளதால் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!