கரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் கரோனா கண்டறியப்பட்டது முதல் திருப்பூர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. ஊரடங்கு உத்தரவு அமல் படுத்திய காரணத்தால் திருப்பூர் நகரம், ஊரக பகுதிகளில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள், கடைகள் கால வரையறையின்றி மூடப்பட்டன. பின்னர், பொருளாதார நடவடிக்கைகளுக்காக பொதுமுடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதனால் பின்னலாடை நிறுவனங்கள் ஓரளவு இயங்கத் தொடங்கின. வெளிமாநில, வெளிமாவட்ட தொழிலாளர்கள் பெருமளவில் சொந்த ஊர் சென்றுவிட்டதால், திருப்பூரில் தங்கியிருந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமே பணிக்குத் திரும்பினர். நாளடைவில் தொழிற்சாலைகள் இயக்கம் அதிகரித்ததில் வெளிமாநில தொழிலாளர்கள் அரசு உதவியுடன் பணிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் கடைகளும், வர்த்தக நிறுவனங்களும் கூட திறக்கப்பட்டன. இவற்றை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு பகுதி வாரியாக அலுவலர்கள் குழு செயல்பட்டது. நகரத்தின் முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் இயல்புநிலையை எட்டியுள்ளது.
பொதுப் போக்குவரத்தான ரயில்கள் இயங்காத நிலையிலும் நிறுவனங்களின் வாகனங்கள் மூலம் தொழிலாளர்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவிர கரோனா அச்சத்தால் பேருந்தைத் தவிர்த்து பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். போலவே, நான்கு சக்கர வாகனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளதால் அவினாசி சாலை, குமரன் சாலை, பிஎன் சாலை, பல்லடம் சாலை ஆகியவற்றில் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் திருப்பூர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருவது கண்கூடாகத் தெரிகிறது. சுமாராக 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலைகளில் பயணம் செய்து வருவதாகத் தெரிவிக்கும் திருப்பூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாண்டியராஜன், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், வாகனங்களில் செல்வோர் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு நடத்துவதாகத் தெரிவித்தார்.
பேருந்து போக்குவரத்து இல்லாத சூழலில் பொதுமக்கள் தங்களது சொந்த வாகனங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் சாலைகளில் அதிகளவு வாகனத்தை பார்க்கமுடிகிறது. மீண்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளதால் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள விதிகளின் அடிப்படையில் கடந்த மாதம் முதல் அரசு பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ளது. தற்போது முதற்கட்டமாக 70விழுக்காடு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பேருந்துகளில் போதிய அளவு பொதுமக்கள் பயணிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது.
இது தொடர்பாக பேசிய திருப்பூர் அரசு பேருந்து நடத்துநர் சுப்பிரமணி, ”பொதுமக்களின் வசதிக்காகத்தான் அரசு பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கரோனா அச்சம் காரணமாக பெரும்பாலான மக்கள் பேருந்துகளில் பயணிக்க அச்சம் கொள்கின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற அச்சம் இன்னும் பொதுமக்களிடையே உள்ளது. ஆனால் பொதுமக்களின் வசதிக்காக தான் அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது.
பொதுமக்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடியும். தற்போது பள்ளி, கல்லூரிகள் விடுமுறையில் இருப்பதால் பேருந்துகளில் கூட்டம் குறைவாக உள்ளது. வரும் காலங்களில் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில் பேருந்துகள் அதன் இயல்பான நிலைக்கு வந்துவிடும். பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மிகவும் சுகாதாரமான முறையில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் பயமின்றி பேருந்துகளில் பயணம் செய்யலாம்” என்றார்.
பொதுமுடக்கத்திற்கு பின்னர் போக்குவரத்து தடையின்றி இயங்குவது மக்கள் இயல்பு நிலைக்கு வந்ததன் வெளிப்பாடு தான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. உழைத்தால் தான் உணவு எனும் போது கரோனா போன்ற பெருந்தொற்று உழைக்கும் வர்க்கத்தினருக்கு உயிர்க்கொல்லியாக தெரியவில்லை. திருப்பூரில் இயல்பு நிலை திரும்பியதற்கும் இவர்கள் தான் முழுமுதற்காரணம்.
இதையும் படிங்க: பாரத் பந்த்தை மிஞ்சிய கரோனா பீதி: மக்கள் இயல்பு வாழ்க்கை முடக்கம்