நாடு முழுவதும் நீட் தேர்வு நாளை (செப்டம்பர் 12) நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முதன்முறையாக திருப்பூரிலும் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக மொத்தம் 90 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமாக 24 நபர்கள் ஒரு அறையில் தேர்வு எழுதுவார்கள். ஆனால் கரோனா காலம் என்பதால் ஒரு அறைக்கு 12 நபர்கள் என மொத்தம் ஆயிரத்து 80 பேர் இந்த மையத்தில் தேர்வு எழுதவுள்ளனர்.
திருப்பூரில் இயங்கும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் மேற்பார்வையாளராக வர உள்ளனர். ஒரு அறையில் இரண்டு மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 150 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி ஐந்து மணிக்கு முடிவடையும் தேர்வில், ஈரோடு, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மாணவர்கள் வர உள்ளனர்.
மாணவர்களின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு இயல்பாக இருப்பதைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் 30 நிமிடம் கழித்து மீண்டும் பரிசோதிக்கப்படும். அப்போதும் அதே போல் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேர்வு எழுத தனியாக அறை ஒதுக்கப்படும். இந்த அறையில் மேற்பார்வையாளராக இருக்கும் நபர்களுக்கு முழு கவச உடை கொடுக்கப்படும். மேலும் மற்ற அனைத்து நபர்களுக்கும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.