கரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள பின்னலாடை உள்ளிட்ட பிற தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள் பலர் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், “தமிழ்நாடு முழுவதுமே கடந்த 10 நாள்களாக புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய, மாநில அரசுகளே முழு பொறுப்பு. கடந்த மாதம் 29ஆம் தேதி புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டும், இதுவரை திருப்பூருக்குள் இருக்கும் புலம்பெயர்ந்து தொழிலாளர்களை அழைத்துச்செல்ல ஒரு ரயில்கூட வரவில்லை. இதுகுறித்து பலமுறை உரிய அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றும் முறையான பதில் இல்லை” எனத் தெரிவித்தார்.
மேலும், போராடுகின்ற வடமாநில தொழிலாளர்களை அடிப்பதற்கு காவல் துறைக்கு யார் உரிமை கொடுத்தது எனவும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் இந்த போராட்டமே மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க...சவுதியிலிருந்து 153 பயணிகள் கேரளா வருகை!