திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்புப் பணிகள், குடிமராமத்துப் பணிகள், வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, "தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக திருப்பூரில் 42 செக்போஸ்ட் அமைத்து வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைவரும் முறையாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல், மாநகராட்சி பகுதிகளிலும் அதற்குரிய அலுவலர்களை நியமித்து முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூரைப் பொறுத்தவரை, இங்கே இருப்பவர்கள் யாருக்கும் பாதிப்பு கிடையாது. வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமாக மட்டுமே நோய் பரவியுள்ளது. திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது 112 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 385 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட இதுவரை 170க்கும் மேற்பட்டோர் பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது உள்ளவர்களும் நலமுடன் இருக்கிறார்கள்.
தற்போது கூட 2,100 படுக்கை வசதிகளுடன் முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு, இனி முழுமையாக விசாரணை நடத்தப்பட்ட பின்னரே விண்ணப்பித்தவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும்.
தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக பிளஸ் 2 தேர்வில் திருப்பூர் மாவட்டம், இரண்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு அமைச்சர் என்ற முறையில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வருகின்ற ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், 1.50 லட்சம் மகளிருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கப்படும். 12 ஆயிரம் மகளிருக்கு கறவை மாடுகளும்; 1.50 லட்சம் மகளிருக்கு 25 நாட்டுக்கோழிகளும் தலா ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு மட்டும் 3 லட்சத்து 12 ஆயிரம் மகளிருக்கு இந்த நலத்திட்ட உதவிகள் செய்யப்பட உள்ளன. அதற்கான பயனாளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் சலுகைகளை தொழில்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் - முதலமைச்சர்