கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இதன் காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி மே மாதம் இறுதியில் தேர்வுகள் நடைபெறும் என அரசு அறிவித்தது.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் விடுமுறை விடப்பட்டுள்ள சூழ்நிலையில், திருப்பூர் குமார் நகர் பகுதியில் உள்ள நகரவை மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வீடியோ கால் மூலமாக தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமையாசிரியர் காயத்ரியின் அறிவுறுத்தலின்படி மற்ற ஆசிரியர்கள் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியை கல்பனா கூறுகையில், "மாணவர்கள் தாங்கள் படித்த பாடங்களை நினைவில் வைத்துக்கொள்ளவும், அதற்குப் பயிற்சியளிக்கவும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் அனுப்பப்படுகிறது.
மாணவர்களும் அதற்கு விடையெழுதி விடைத்தாள்களை வாட்ஸ்அப்பிலே அனுப்பி வைக்கின்றனர். மேலும், face to face ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடங்களை எடுத்து வருகின்றனர். மாணவர்களும் முழு ஒத்துழைப்போடு செயல்பட்டு வருகின்றனர். இதனால், மாணவர்களின் தேர்ச்சி விழுக்காடு குறைய வாய்ப்பு இருக்காது என்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இவை மட்டுமல்லாமல் ஆன்லைனில் ஆசிரியர்களுக்கு டெக்னாலஜி தொடர்பாகவும், ஆங்கில மொழி தொடர்பாகவும் பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெக்னோ ஆசிரியர்கள் குழு (Techno Teacher's Team) ஒன்றை அமைத்து, ஒருங்கிணைத்து இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து வழங்குகிறோம்.
ஆசிரியர்களுக்கு இந்த விடுமுறையின்போது வழங்கப்படும் பயிற்சிகள், ஊரடங்கு முடிந்து பள்ளிகள் திறந்த பின்பு அவர்களது வகுப்பறையில் கற்றல், கற்பித்தலின் முன்னேற்றத்திற்காகப் பயன்படும். ஆசிரியர்களும் அதற்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
தனியார் பள்ளிக்கு நிகராக அரசுப் பள்ளி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதால், அரசுப் பள்ளிகளில் இனி தேர்ச்சி விழுக்காடும், மாணவர்கள் சேர்க்கை வீதமும் அதிகரிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இதையும் படிங்க: ஸ்டாலினுடன் வீடியோ கால்... 400 பேருக்கு உணவு... கரோனா காலத்திலும் அசத்தும் இட்லி பாட்டி!