திருப்பூர்: மன்னரை அடுத்த பாரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணியம்மாள் (70). கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். மேலும், இவரது வீட்டின் அருகே இவருக்குச் சொந்தமாக உள்ள மூன்று வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். அதில், ஒரு வீட்டில் திருப்பூரைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்துள்ளார்.
இவர் தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மணியம்மாவிடம் அதிகமாகப் பணம் இருப்பதை அறிந்த செந்தில்குமார் அதனைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக தன்னுடன் பணியாற்றும் மதுரையைச் சேர்ந்த போதிராஜன், சதீஷ் ஆகியோர் கூட்டு சேர்த்துள்ளார்.
நேற்று (நவ.29) நள்ளிரவு மது போதையில் மணியம்மாளின் வீட்டுக்குள் நுழைந்த செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்கள், வீட்டிலிருந்த சார்ஜர் ஒயரை கொண்டு மணியம்மாளின் கழுத்தை இறுக்கி கொலை செய்தனர். பின்னர், அந்த வீட்டில் நகை, பணத்தைத் தேடி உள்ளனர். ஆனால், அங்கு மூன்று கிராம் நகை, செல்போன், மற்றும் ரூபாய் 2000 பணம் மட்டுமே இருந்தது.
அதனைத் திருடிவிட்டு வீட்டை வெளி பக்கமாகப் பூட்டி சென்றுள்ளனர். இதனிடையே வீடு வெளிப்பக்கமாக பூட்டி இருக்கும் சூழலில் வீட்டின் உள்ளே லைட் எரிவதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக திருப்பூர் வடக்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மணியம்மாள் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதையடுத்து, மணியம்மாள் உடலைக் கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரது வீட்டில் குடியிருந்த செந்தில் குமார் என்பவர் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
செந்தில் குமாரின் மொபைல் எண்ணைக் கொண்டு அவர் இருக்கும் இடத்தை அறிந்த காவல்துறை அங்குச் சென்று அவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். பணத்திற்காக தன் நண்பர்களுடன் சேர்ந்து மணியம்மாளை கொலை செய்ததை செந்தில்குமார் ஒப்புக்கொண்டார். இதையடுத்து செந்தில்குமார், போதிராஜன், சதீஷ் ஆகியோர் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் கொலைக்கான காரணம் பணம் நகைகளைத் திருடுவதற்காகவா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பூரில் 3 மாதங்களில் 12 ஆயிரம் பேரைக் கடித்த தெருநாய்கள்.. அச்சத்தில் பொதுமக்கள்!