கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் நாளை மறுநாள் (மே.14) இரவு முதல் முழு ஊரடங்கை கடைப்பிடிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் நேற்று (மே.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கரோனா நெருக்கடி குறித்த மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டோம். மாநிலத்தில் உள்ள சிக்கல்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கினார். இந்த நேரத்தில் முழு கட்டுப்பாடுகளுடன் நிறுவனங்களை இயக்க முயற்சி செய்தோம். ஆனால் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதனால் நாங்களாகவே முன்வந்து நிறுவனங்களை மூட வேண்டும் என பனியன் தொழிற்சங்கங்கள் உள்பட, பல்வேறு தரப்பிலிருந்தும் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, நாளை மறுநாள் (மே.14) முதல் நிறுவனங்களை மூட முடிவு செய்திருக்கிறோம்.
திருப்பூர் ஏற்றுமதி வர்த்தகம், ஒப்பந்த அடிப்படையில் நடப்பதால், குறித்த காலத்திற்குள் ஆடைகளைத் தயாரித்து அனுப்ப வேண்டியது அவசியமாக இருக்கிறது. காலதாமதம் ஏற்பட்டால், கடும் நஷ்டத்தை ஏற்றுமதியாளர்கள் சந்திக்க நேரிடுகிறது. இதனால் அவசரமாக முடித்துக் கொடுக்க வேண்டிய ஆர்டர்களை, மூன்று நாள்களில் முடித்துவிட்டு, மே 14ஆம் தேதி இரவு முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கைக் கடைப்பிடிக்கவிருக்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.