திருப்பூர் மாவட்டம் பல்லடம் அனுப்பட்டி ஊராட்சியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறு விவசாயம், கால்நடை பராமரிப்பு, முறை சாரா தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். அனுப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட ஊரின் மேற்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இரும்பு ஆலை ஒன்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதனால் அனுப்பட்டியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சரின் தனிப் பிரிவு ஆகியவற்றிற்கு மனு அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே இந்த இரும்பு ஆலையின் விரிவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும்; ஆலை செயல்படாமல் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனக் கோரி பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே செப்டம்பர் மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இரும்பு ஆலையால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துரைத்தனர்.
இரும்பு ஆலை நிர்வாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர். ஆனால், தற்போதுவரை ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கவும் ஆலையை நிரந்தரமாக மூடவும் எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் அனுப்பட்டி கிராம மக்கள், இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்தனர். ஆனால், காவல்துறையினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க முற்றுகைப் போராட்டத்தை ஒத்திவைத்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கோவை பி.ஆர். நடராஜன் தெரிவிக்கையில், "அனுப்பட்டியில் செயல்பட்டுவரும் இரும்பு ஆலையால் அப்பகுதி மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் வந்து அனுப்பட்டியில் செயல்பட்டுவரும் இரும்பு ஆலையை விரிவுபடுத்த மாட்டோம் என எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும்
அவ்வாறு இல்லாவிடில் அடுத்த கட்டமாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க:
60 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பழங்குடியின மக்கள்!