திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மங்கலம் நால்ரோடு பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக கிளினிக் நடத்திவருகிறார். இந்தக் கிளினிக்கில் மங்கலம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் காய்ச்சல், இதர நோய்களுக்கு வந்து சிகிச்சைப் பெற்றுச் செல்கின்றனர்.
பாலியல் தொல்லை
இந்த கிளினிக்கில் கடந்த மூன்று மாதங்களாக திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியாகப் பணியாற்றிவருகிறார். தனது குடும்பத்துடன் மங்கலம் பகுதியில் தங்கியிருந்து கிளினிக்கிற்கு வேலைக்குச் சென்றுவந்தார்.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி வெளிநோயாளிகள் யாரும் இல்லாத நேரத்தில் பணியிலிருந்த மருத்துவர், செவிலிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
தலைமறைவு
பின்னர் கிளினிக்கிலிருந்து மனவேதனையுடன் வீட்டிற்கு வந்த செவிலி, இது குறித்து மங்கலம் காவல் நிலையத்தில் மருத்துவர் மீது புகாரளித்துள்ளார். புகாரின்பேரில் மங்கலம் காவல் துறையினர் மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள அவரைத் தேடிவருகின்றனர்.