திருப்பூர்: பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் , ” ‘செல்ஃபி வித் அண்ணா’ எனும் போட்டி ஜூலை 15இல் நடத்தப்படவுள்ளது. அதில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம்.
![பாஜக விளம்பரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15832903_h.jpeg)
இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மற்றும் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி பெண்கள் கலைக்கல்லூரி என்ற இரண்டு கல்லூரிகளிலும் இன்று நடைபெறுகிறது. பாஜகவில் இணைந்து தேசத்தின் கரத்தை வலுப்படுத்த வாருங்கள்” என விளம்பரம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த விளம்பரத்தை அறிந்த இரண்டு கல்லூரி முதல்வர்களும் இதற்கும் தங்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை, தங்களிடம் அனுமதி பெறப்படாமல் கல்லூரியின் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் மற்றும் கோவை மண்டல கல்வி இயக்குநரகம் என மூன்று இடங்களுக்கும் கடிதம் மூலமாக விளக்கம் அளித்து, காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர்.
இந்நிலையில் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள எல்.ஆர்.ஜி கல்லூரிக்குச் சென்ற பாஜகவினர் கல்லூரி வளாகத்திற்கு வெளியே பரப்புரையில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் முன்பக்க கதவை திறக்காமல் பின் வழியாகத் தேர்வு முடிந்த மாணவிகளை வெளியே அனுப்பினர்.
இதனை அறிந்த பாஜகவினர் கல்லூரிக்குள் நுழைந்து பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் முன் பக்க கதவுகளை திறக்க வலியுறுத்தினர். அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பரப்புரையில் ஈடுபட்டனர்.
அப்போது சில மாணவிகள், 'தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத்துகிறீர்கள், தங்களால் வெளியே வர முடியாத சூழலுக்கு பாஜகவினர் தங்களை உள்ளாக்குவதாக' குற்றம் சாட்டி சில மாணவிகள் பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பாஜகவினர் பரப்புரையில் ஈடுபட்டு வந்த நிலையில் கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பரப்புரை நிகழ்ச்சி நடத்த பாஜகவினர் காவல் துறையினரிடம் அனுமதி பெறாத காரணத்தைக்கூறி கலைந்து போக வேண்டும் என காவல் துறையினர் எச்சரித்தனர். இதனை எடுத்து பாஜகவினர் பரப்புரையினை கைவிட்டு புறப்பட்டுச்சென்றனர்.
![கல்லூரியின் விளக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15832903_df.jpeg)
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர்கள் உட்பட 44 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்ஸின் அடுத்தடுத்த பதிலடி!