திருப்பூர் பாண்டியன் நகரில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக திருமுருகன் பூண்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல் துறையினர் பாண்டியன் நகரில் உள்ள துர்கா பேன்சி என்ற கடையில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கடையில் புகையிலை பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. தொடர்ந்து கடையின் உரிமையாளர் நாட்டேராம் (26) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவரும் அவரது சகோதரர் பிகாராம் (30) என்பவரும் குடோனில் புகையிலை, குட்கா ஆகிவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
கல்லம்பாளையம் பகுதியில் பெரிய குடோனை வாடகைக்கு எடுத்து, அதில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருள்களை பதுக்கி வைத்துள்ளனர். அங்கிருந்த 700 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:கள்ளத்தனமாக மது விற்ற பெண் கைது - 406 மது பாட்டில்கள் பறிமுதல்