திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று(மார்ச் 28) மாலை மாணவி பள்ளி முடிந்து வீடு திரும்பியுள்ளார். அதன்பிறகு சிறிது நேரத்தில் மாணவியின் தாய் பணி முடிந்து வீட்டுக்கு வந்து கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டின் பின்புற கதவு அருகே மாணவி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனை கண்ட மாணவியின் தாய் அலறி கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவியின் உடல் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சேஷாங் சாய் மற்றும் மேற்கு மண்டல ஐஜி முத்துசாமி ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடற்கூராய்வின் அறிக்கையில் மாணவியின் கழுத்தில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறுவன் உடலைப் புதைக்க இடம் மறுப்பு - சர்ச் மீது தாய் குற்றச்சாட்டு