கோவை பெரிய தடாகம் பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி என்ற காட்டு யானை கடந்த 25 ஆம் தேதி பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, கடந்த வாரமாக திருப்பூர் கிராமங்களில் சுற்றித்திரிந்து வருகிறது.
இதையடுத்து 100க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த யானையின் பின்னால் சென்று கண்காணித்து வருகின்றனர்.காட்டு யானை சின்னத்தம்பிக்கு சமூக வலைத்தளங்கள் உட்பட பல இடங்களில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது.
இந்நிலையில் திருப்புர் ரயில் நிலையத்தின் முன்பு சின்னத்தம்பிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரில் மனிதர்கள் செய்யும் குற்றத்திற்க்கு சின்னத்தம்பிக்கு தண்டனையா? சின்னத்தம்பியை வாழ விடுங்கள், காடுகளை அழிக்கும் மனிதர்கள் நாட்டில்… காடுகளை உருவாக்கும் யானைகள் கூண்டில்.. என அச்சடிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேனரை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்வதுடன் சின்னத்தம்பிக்கு ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில் உரிய அனுமதி இன்றியும் அமைப்பின் பெயர் பதிவிடப்படாமலும் பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பேனர் வைத்தவர்கள் குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக காட்டு யானை சின்னத்தம்பி கும்கி யானையாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் கடந்த 2-ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.