திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன், செம்மிபாளையம் ஊராட்சி கரிவரதன் நகரில் மேல்நிலைத் தொட்டி கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்ட வந்திருந்தார். இந்நிகழ்ச்சி முடிந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த புஷ்பலதா என்பவர் தனது வீட்டின் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது, அதற்கான தொகையை ஊராட்சி மன்ற தலைவி ஷீலாவின் கணவர் புண்ணியமூர்த்தி வாங்கியுள்ளார். ஆனால் தற்போது இணைப்பு வழங்காமல் தங்களை அலைகழிக்கிறார் எனக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த பெண்ணை பல்லடம் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன் சமாதானப்படுத்த முயன்றார். இதனை அறிந்து அங்கு வந்த புண்ணியமூர்த்தி தங்கள் பகுதியில் வந்து பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. இது எங்கள் பகுதி பிரச்னை இதில் தலையிட வேண்டாம் என தனது ஆதரவாளர்களுடன் எம்.எல்.ஏ.வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
பணத்தை கொடுத்த பின்னரும் தண்ணீர் இணைப்பு வழங்காததை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை சமாதானம் செய்ய முயன்ற எம்.எல்.ஏ.வையும் ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊராட்சி செயல்பாடுகளில் தலைவரின் குடும்பத்தினர் தலையீடு இருக்கக் கூடாது என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு எந்த பணியும் செய்யவில்லை - எம்எல்ஏவிடம் வாக்குவாதம்