கோவை மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற பி.ஆர். நடராஜன் பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக நேற்று திருப்பூர் மாவட்டம் சின்ன ஆண்டிபாளையம் பகுதிக்கு வருகை தந்தார். அப்பொழுது ஆண்டிபாளையம், குளத்துப்புதூர் பகுதி விவசாயிகள், கிராம மக்கள் அவரை சந்தித்து, ஆண்டிபாளைத்தில் ஏழரை ஏக்கர் பரப்பளவு கொண்ட சிறிய குளத்தை அரசு ஆக்கிரமித்துள்ளது.
இந்தக் குளத்தில் உயர்மட்ட தண்ணீர் தொட்டிகள், திடக்கழிவு மேலாண்மை உரக் கிடங்குகள் அமைத்துள்ளதாகவும், தற்போது கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து கழிவுநீரை 71 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியகுளத்தில் விட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இதனை தடுத்து ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டும் என பி.ஆர். நடராஜனிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். அப்பகுதியை பார்வையிட்ட பி.ஆர். நடராஜன், குளம் ஏரிகளை பாதுகாப்பது குறித்து அரசின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என உறுதியளித்துச் சென்றார்.