திருப்பூர்: விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பரவலாக நடந்து வரும் தொழில் ஆகும். தினமும் இங்கு ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தியாகின்றன. ஆனால், சமீப காலமாக மின் கட்டண உயர்வு, மூலப் பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மார்க்கொட் மந்த நிலை உள்ளிட்டவைகளால் விசைத்தறி தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளது. இதன் காரணமாக போதிய வருமானமும் இல்லாத நிலை உருவாகி உள்ளது.
இதன் காரணமாக, விசைத்தறி தொழிலில் காலம் காலமாக ஈடுபட்டு வரும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்படைந்து உள்ளனர். எனவே, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு வழங்க வேண்டி மத்திய, மாநில அரசிடம் தொடர்ந்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாததால், விசைதறி உற்பத்தியாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் தொழில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகி உள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக தொழில் மிகவும் வீழ்ச்சி அடைந்து கொண்டிருப்பதாகவும், இந்த பிரச்னையை தமிழக அரசு உடனடியாக தீர்க்க வேண்டி கோரியும், திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம், கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் சில தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளனர்.
சர்வதேச சந்தையில் பல்வேறு நாடுகளுக்கு இடையிலான போர் மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாகவும், ஜவுளி தொழில் ஏற்றுமதி வெகுவாக குறைந்துள்ளதாலும், பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகளில் மிகவும் மலிவான துணிகள் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாலும், உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஜவுளி கொள்கை, ஜவுளி தொழிலுக்கு என்ற தனிப்பட்ட மின்சாரம் மானியம் போன்ற காரணங்களால், ஜவுளி உற்பத்தி செலவு நமது மாநிலத்தை விட குறைவான காரணத்தினால், நம்மால் போட்டி போட இயலாத சூழல் உருவாகி உள்ளது. மேலும், ரோட்டோ காட்டன் என்கின்ற பாலிஸ்டர் துணிப்பைகளால் நமது இயற்கை பருத்தியினால் உற்பத்தி செய்யப்பட்ட துணிப்பைகளின் தேவை முற்றிலுமாக சரிந்து விட்டது.
எனவே அரசு மீண்டும் இதை கையில் எடுக்கக் கோரியும், மின்சார மானியம் மீண்டும் வழங்க கோரியும் இன்று (நவ.5) முதல் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜவுளி தொழில் சார்ந்த ஆட்டோ லூம், சூல்ஜர், ஏர்ஜெட் பவர்லூம் போன்ற அனைத்து ஜவுளி தொழில்களின் உற்பத்தியையும், வரும் 25ஆம் தேதி வரை 20 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தற்போது தறி தொழிற்சாலைகள் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு 50 கோடி ரூபாய் என்ற கணக்கில், 20 நாட்களுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரை உற்பத்தி பாதிப்பு ஏற்படும். மேலும், பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: "எங்கிருந்துடா வரீங்க நீங்களாம்?" - Happy Street நிகழ்ச்சியை விமர்சித்த நடிகர் ரஞ்சித்.. கோவையில் நடந்தது என்ன?