திருப்பூர்: பல்லடம் அருகே கள்ளக்கிணறு கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி இரவு செந்தில்குமார் என்பவரின் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தின் வழிப்பாதையில் அமர்ந்து மர்ம நபர்கள் மது அருந்தி உள்ளனர். தங்களது இடத்தில் மது அருந்தியது குறித்து கேட்ட செந்தில்குமார் மற்றும் அவரது குடும்பத்தார் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினம்மாள் ஆகிய 4 பேரையும் அந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொலை நடந்த இடத்தில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் தப்பி ஓட முயற்சித்ததில், கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தற்போது கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மேலும் போலீசார் ஐந்து தனிப்படை அமைத்து திருப்பூர் கோவை மற்றும் தென் மாவட்டங்களில் கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்த நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடைய நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற ராஜகுமாரின் தந்தை ஐயப்பன் என்பவரை நேற்று (செப். 6) போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று (செப். 6)காலை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்கின்ற ராஜ்குமார் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த சோனை முத்தையா ஆகிய இருவரும் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய வந்தபோது பல்லடம் போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும், ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இன்று (செப். 7) காலை இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான வெங்கடேஷ் என்கிற ராஜ்குமார் இரண்டு கால்களும் உடைந்த நிலையில், சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து போலீசாரிடம் கேட்ட கேட்ட போது, "முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட வெங்கடேஷ் என்கின்ற ராஜகுமாரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை காட்டுமாறு அழைத்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, கொலை நடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர் தப்பி செல்ல முயன்ற நிலையில், போலீசார் அவரை 2 கால்களிலும் சுட்டு பிடித்தனர் என்று பல்லடம் காவல்துறை கண்காணிப்பாளர் சௌமியா தகவல் தெரிவித்து உள்ளார்.