திருப்பூர் - ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையத்தில் இயங்கி வரும் பேங்க் ஆப் பரோடா வங்கி ஏடிஎம்மின் கதவுகள் உடைக்கப்பட்டு இயந்திரத்தை கொளளையர்கள் தூக்கி சென்றனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், கைரேகை நிபுணரகள், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கினர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “ கடந்த 19ம் தேதி ஏடிஎம் இயந்திரத்தில் 15 லட்ச ரூபாய் நிரப்பப்பட்டதாகவும், தற்போது ஒன்று முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை இயந்திரத்தில் பணம் இருந்திருக்கலாம் என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். வங்கி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.நான்கு சக்கர வாகனத்தில் கயிறு கட்டி ஏடிஎம் இயந்திரத்துடன் இணைத்து வாசல் வரை கொண்டு வந்து, பின்னர், இயந்திரத்தை வாகனத்தில் ஏற்றி சென்றுள்ளனர். இதில் ஏடிஎம் இயந்திரத்தின் கதவு, வாசல் ஆகியவை சேதமடைந்துள்ளது. கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனத்தை பெருந்துறை விஜயமங்கலத்தில் விட்டுவிட்டு ஏடிஎம் இயந்திரத்தை மற்றொரு வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறோம்.”
இவ்வாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏடிஎம் இயந்திரம் தூக்கி செல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்