திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவிற்கு உட்பட்ட புதுப்பாளையம் வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு மதுபானக்கடை உள்ளன. இந்நிலையில், மீண்டும் ஒரு புதிய கடை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோது, அப்பகுதியினர் சார்பாக ’மதுக்கடை வேண்டாம்’ என பலமுறை மனு அளிக்கப்பட்டது.
பல முறை போராட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறும் அப்பகுதியினர், பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட அரசு மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி இன்று (டிசம்பர் 30) திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நடைபெற்ற இந்த தர்ணாவில், பெண்கள் உள்பட பலர் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்றனர். பொதுமக்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சிலரை மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் அழைத்து செல்வதாக உறுதியளித்தனர்.
இதையடுத்து, பொதுமக்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்துச் சென்றனர். மாவட்ட ஆட்சியர் தங்கள் கோரிக்கையை ஏற்று மதுக்கடையை விரைந்து அகற்றவில்லை என்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:"வாய்மையே வெல்லும்" தார்மீக உரிமையை மீறிவிட்ட அரசு - டாஸ்மாக் மூடாததற்கு கண்டனம்