திருப்பூர்: திருப்பூர், அவிநாசி, பல்லடம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஏலச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, பணத்தை மீட்டுத் தரக்கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, காவல்துறையினர் பணமோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் கருவம்பாளையம் மாகாளியம்மன் கோயில் அருகில் தனியாருக்குச் சொந்தமான நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையில் மாதச்சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்துள்ளனர்.
இந்த நிறுவனத்துக்கு பல்லடம், அவிநாசி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கிளைகள் இருந்ததாகவும் தெரிகிறது. இதனிடையே, சீட்டில் சேர்ந்த நபர்களுக்கு முதிர்வுகாலம் முடிந்தும் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்றைய முன்தினம் (ஜன.3) நிறுவனத்துக்குச் சென்று பார்த்தபோது, நிறுவனத்தை காலி செய்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணத்தை தராமல் மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட தனியார் நிதி நிறுவன உரிமையாளரான கார்த்திக்கை (32) கைது செய்து, அவர்களது பணத்தை மீட்டுத்தர வேண்டும் என்று காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நாக்கை துறுத்தியவாறு திமுக நிர்வாகியை கடிந்துகொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி!