திருப்பூர் மாவட்டம் பிஏபி பாசனத்தில் வெள்ளகோவில் கிளை வாய்க்காலுக்கு உரிய தண்ணீர் திறக்கப்படாததைக் கண்டித்தும், அலுவலர்கள், தமிழ்நாடு அரசைக் கண்டித்தும் பிஏபி கடைமடை பாசன விவசாயிகள் சார்பில் விவசாயி ஒருவர் இன்று (மார்ச் 16) காங்கேயம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்செய்தார்.
இவர் காங்கேயம் காரியாலயம் பகுதியிலிருந்து, மாட்டு வண்டியில் மாடுகள் இல்லாமல் மனிதர்கள் இழுத்துவந்து நூதன முறையில் ஊர்வலமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல்செய்தார்.
இந்த ஊர்வலத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். நீர்ப்பங்கீடு தொடர்பான பிரச்சினை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி, 1000 விவசாயிகள் சார்பில் வேட்புமனு தாக்கல்செய்யப்படும் என ஏற்கனவே விவசாயிகள் சார்பில் தெரிவித்திருந்தனர்.
அதன்படி தற்போதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் விருப்ப மனுவை வாங்கி அதைப் பூர்த்திசெய்யும் பணியில் உள்ளனர். அடுத்தடுத்த நாள்களில் அனைத்து விவசாயிகளும் வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாகக் கூறியுள்ளனர்.