கோவை, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் அதிகமாக கறிக்கோழி பண்ணை இயங்கி வருகின்றன. இதில், பொள்ளாச்சியில் மட்டும் கறிக்கோழி பண்ணைகள் பத்தாயிரத்துக்கும் மேல் இருப்பதாகவும், இந்த தொழிலை நம்பி 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அரசு கறிக்கோழி வளர்ப்பிற்கும் 2013ஆம் ஆண்டில் ரூபாய் 4.50 மட்டும் கூலியாக வழங்கி வருவதாகவும், இதனை பலமுறை அதிகரித்து தர வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து இதுவரை அரசு செவி சாய்க்கவில்லை என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கோழி வளர்ப்பிற்கு கூலியாக ரூபாய் 12 உயர்த்தி தரவேண்டும் என்று கூறியபோது, அரசு கால்நடை துறை அமைச்சரும், நிறுவனங்களும் விவசாயிகள் கருத்தை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு 6 ரூபாய் மட்டும் வளர்ப்பிற்கு கூலியாக தருவதாக முடிவு செய்துள்ளனர்.
இதை ஏற்க மறுத்து கறிக்கோழி வளர்ப்போர் சங்கம் சார்பில் அதன் செயலாளர் கிருஷ்ணகுமார், ராஜசேகர், தங்கராஜ் தலைமையில் இன்று கோழி நிறுவனங்கள் முன் 100-க்கும் மேற்பட்டோர் தர்ணாவில் ஈடுபட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, வரும் 21ஆம் தேதி பல்லடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவிருப்பதாக தெரிவித்தனர்.